Learn options in tamil – part 7: ஆப்ஷன்ஸ் அறிவோம் – 7

என்னதான் வாழைப்பழத்தை சர்க்கரை போட்டு தேன் விட்டு ஜூஸ் செய்து விஷூவல் டிரேடிங் என்று படம் போட்டு பாகம் குறித்தாலும், நம் மக்களுக்கு அடிப்படையில் ஆகப்பெரிய குழப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு பங்கு அன்றைக்கு வர்த்தகமாகும் விலையில் எங்கே அதிகபட்சம் கீழே செல்கிறதோ அங்கே வாங்கினால் அது மேலேறும்போது நமக்கு லாபம் கிடைக்கும் என்பது அடிப்படை விதி.

Top and bottom Daily Range for Nifty

எது கீழே? எது மேலே என்ற குழப்பத்திற்கான விடைதான் விடியில் டான் செயின் சானலும், டார்கெட்டும், டிரெண்ட் மாறியதைக் குறிப்பிடும் கோடும் நமக்கு எளிமையாகச் சொல்கிறது.

ஆனாலும் குழப்பம் தீரவில்லை.

தினசரி வர்த்தகத்திற்கு மேலே கூறியது போல என்றால் சிறிது நீண்டகால முடிவிற்கு பொசிஷினல் டிரேடிங்கிற்கும் இதே பார்முலாதான்.

கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்டு சற்றொப்ப 2500 ஆண்டுகளாக விடை அளிக்கப்பட்ட ஒன்று உண்டென்றால், கேஷ் மார்கெட்டில் எதை அடிப்படையாக வைத்து முதலீடு செய்வது?

அதற்கான பதில் என்ன? 

கேஷ் மார்கெட்டில் நீங்கள் ஒரு பங்கினை வாங்கி அது ஒரு லாபம் ஈட்டும் வரையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்.

அப்பொழுது 1 நிமிட சார்ட்டா? 15 நிமிட சார்ட்டா? விடியில் சொல்லும் டார்கெட்டா?

நீண்டகால முதலீடு என்றாலே கவனிக்கவேண்டியவை 

01. அது நல்ல கம்பெனியின் பங்கா? 

அதிக மக்கள் வாங்கி விற்கும் ஐடியா பங்கினையோ, யெஸ் பாங்க் பங்கினையோ வாங்கி வைத்துக்கொள்வதால் என்ன லாபம்? 

02. இப்பொழுதைக்கு ஊற்றி மூடாத கம்பெனி, அது தயாரிக்கும் பொருட்கள் மக்களால் வாங்கப்படுபவை அல்லது அதிகம் நம் கண்ணில் தென்பட்டு மக்களால், நம்மால் விரும்பப்படுவதாக, உபயோகிக்கப்படுவதாக, அதிகம் தெரிந்த பெயராக இருப்பின் நல்லது.

உதாரணம் – ரிலையன்ஸ், ப்ரிட்டானியா, ஐ டி சி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், எம் ஆர் எஃப், சியட், சிப்லா, க்ளென்மார்க் இப்படிப் பல.

சார், ஐடியாவும் ஊரெல்லாம் தென்படுகிறதே?

நீங்க என்ன சிம் ப்ரோ யூஸ் பண்றீங்க? ஐடியாவா?

இல்லீங்க ப்ரோ, ரிலையன்ஸ் ஜியோ.

சரி, என்ன வாங்கலாம் என்பதற்கான எளிய விதியைப் பார்த்தோம், இதில் அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள், நன்றாக விலை ஏறும் பங்குகள் என்று பல பிரிவுகள் உண்டு. தேடி அதையெல்லாம் படியுங்கள், முடிவெடுங்கள்.

அப்படி முடிவெடுத்து ஒரு பங்கினை வாங்க முடிவெடுக்கிறீர்கள். விடியில் அதன் டே சார்ட் திறந்து என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்கிறீர்கள். அனைத்தும் நலம். போதாதகுறைக்கு நல்ல லாபத்தில் ஒரு டார்கெட்டையும் காண்பிக்கிறது. சிறிது சிறிதாக இறக்கங்களில் வாங்கி ஆவரேஜ் செய்ய ஆரம்பிக்கலாம்.

வாங்கி அமைதியாக அது விலை ஏறக் காத்திருங்கள். 100% லாபம் வந்ததும் பாதியை விற்றுவிடுங்கள். போட்ட முதலீடு கைக்கு வந்துவிட்டது, மீதமுள்ளது ஓசியில் கிடைத்த பங்குகள், அது அப்படியே இருக்கட்டும். அது டிவிடெண்ட் தரும், போனஸ் தரும். அது வளர்ந்துகொண்டே இருக்கும்.

தினம் காலையில் சார்ட்டைப் பார்த்து அன்றைக்கு என்ன நடக்கிறது என்று அப்டேட் செய்துகொண்டால் போதும். திடீரென்று மார்கெட் க்ராஷ் என்று அலறுகிறார்களா? கவலையே படாமல் நீங்கள் வாங்கி வைத்துள்ள அல்லது வாங்க நினைத்த பங்குகளை சல்லிசாக வாங்கிப் போடுங்கள். நல்ல பங்குகள் ஒரு வீழ்ச்சிக்குப் பிறகு நன்றாக விலை ஏறும். டபுள் லாபம். உதாரணத்திற்கு கொரோனாவில் ரிலையன்ஸ் விற்ற விலை 800 சொச்சம். இப்பொழுது 2200. 5 மாதங்கள் எவ்வளவு % லாபம்? 

இப்படிப்பட்ட லாஜிக்கில் வாங்கி தினசரி வர்த்தகத்தில் வாங்குபவர்களோடு போட்டி போட்டு சொற்ப லாபத்திற்கு விற்காதீர்கள். 

அடுத்து,

ஒரு பங்கினை டே சார்ட்டில் பார்க்கும்பொழுது அது ஒவ்வொரு நாளும் டான் செயின் சானலில் மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக பயணப்படுவதைப் பார்க்கலாம்.

இப்பொழுது ரிலையன்ஸை வாங்க நினைத்தால் அது டே சார்ட்டில் எவ்வளவு கீழே வருகிறதோ அப்பொழுது வாங்கினால் அது ஓரளவிற்கு குறைந்த விலையில் நாம் வாங்கியதாக இருக்கும்.

ஆப்ஷன் கால் வாங்கவும் இது உதவும்.

என்னுடைய சில ஸ்டிராட்டஜிக்களைச் சொல்கிறேன். இது உதாரணத்திற்கு மட்டுமே. இதை நீங்கள் காப்பி அடித்தால் அதனால் வரும் லாபத்தில் 50% என் அக்கவுண்டில் போடுங்கள். நட்டம் வந்தால் உங்கள் தலையில் அடித்துக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு இதைச் சொல்கிறேன். 

ஜூன் 8 ம் தேதி நிப்டியினை நோண்டிக்கொண்டிருந்தபோது அது 10360 என்ற உச்சத்தில் இருந்தது. 12 ஜூன் 9500 க்கு தடாலடியாக கீழே இறங்கியது. மார்கெட் ஜாம்பவான்கள் எல்லாம் அவ்ளோதான் நிப்டி 500 க்கு போகும், கொரோனான்னா சும்மாவா என்று அடித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

16 ஜூன் கேப் அப் அன்றைக்கு விடி காண்பித்த டார்கெட் 10800 கிட்டத்தட்ட 1000 பாயிண்ட்கள். அதுவும் 15 நிமிட டைம் ப்ரேம்.

Deep OTM Nifty June

ஆப்ஷன் செயினை நோண்டினேன். நிப்டியில் மட்டுமே டிசம்பர் 2020 வரைக்கும் கால்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். அதுவும் 11500. ஆறு மாததில் நிப்டி 11500 போகாதா என்ன? 10800 டார்கெட் காண்பித்துவிட்டது. 10300 வரை மேலே சென்று இறங்கியாயிற்று. இது ஒரு கரெக்ஷன். சரி என்று ஒரு கால் வாங்கினேன். நம்புங்கள் ஜூன் மாதம் நிப்டி 9500 ல் இருந்தபோது 11500 டிசம்பர் மாத கால் வாங்கினேன். கூடவே ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் என்று அதன்பிறகும் வாங்கினேன். 

எல்லாமே ப்ரீமியம் அதிகம். அப்பொழுதைய வீக்லி அல்லது மந்த்லி கேம்களில் விஷப்பரிட்சை செய்ய விருப்பமில்லை. லாபம் குறைவாக வந்தால் என்ன? டென்ஷன் வேண்டாம். 

நிப்டி ஏறியது. நான் வாங்கிய கால்களும்தான். ஒவ்வொரு லாட்டிலும் 100 % லாபம் கிடைத்தது. இடையில் நிப்டி ஏறி இறங்கியதெற்கெல்லாம் கவலைப்படவே இல்லை. யோசித்துப் பாருங்கள் இப்பொழுதும் அதை நான் வைத்திருந்தால் 300% லாபம் கிடைத்திருக்கும். டெலிவரி, எக்ஸ்பையரி மார்ஜின் என்ற எந்தக் கவலையும் இல்லை. 

விடியில் ஒரு டார்கெட் பார்த்து அதை நம்பி பல காரணிகளை முன்வைத்து எடுத்த முடிவு இது. அமெரிக்காவில் 5 ஆண்டுகள் தள்ளிக் கூட ஒரு ஆப்ஷன் கால் வாங்கமுடியும் என்பதை வைத்து செய்த ஒரு ஸ்டிராட்டஜி. வேலை செய்தது. 

எந்த ஒரு பங்கினை தரை மட்டத்திற்கு இறக்குகிறார்களோ, அது நல்ல பங்காக இருப்பின் அடிமட்டத்தில் அதன் இன் தி மணி கால் வாங்கி சிறிது லாபம் பார்த்து விற்றாலே சிறிது சிறிதாக லாபம் பார்க்கமுடியும். 

இதெல்லாமே நான் பயன்படுத்தும் உத்திகளில் சில. இதில் 100% ரிஸ்கும் இருக்கிறது. 300 பாயிண்ட் இறங்கின உடனே நட்டம் பார்த்து தெறிச்சி ஓடிடுவான் என்று அதி புத்திசாலியாக டிசம்பரில் கால் விற்ற அந்த மாகானுபாவனின் அதே 11500 கால் ஆப்ஷனை இரண்டு முறை நிப்டி கீழே வந்தபோது வாங்கி மேலே வந்த போது விற்றேன் என்பது கூடுதல் தகவல். 

வெறுமனே டார்கெட் தெரிகிறது. ஜாக்பாட் அடிக்கலாம் என்று கண்மூடித்தனமாக காசை கரியாக்காமல் இதுபோன்று சில திட்டங்களை உங்கள் மனநிலை, நிதிநிலை சார்ந்து முடிவெடுக்கும்போது சிறியதாக இருந்தாலும் லாபம் என்பது நிச்சயம் கிடைக்கும். 

எச்சரிக்கை: இது நிப்டியில் பலன் தரலாம். ஸ்டாக் ஆப்ஷன்களில் ஒரு மாதம் தள்ளி கிடைப்பது இல்லை. அதிக ப்ரீமியத்தில் விற்று அதனால் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது எப்படி வேலை செய்தது என்று உங்கள் பகுத்தறிவை வைத்து புரிந்துகொள்ள முயற்சித்து உங்களுக்கான ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.

சச்சின் டெண்டுல்கர் பேட்டை மட்டும் காசு கொடுத்து வாங்கிவிட்டால் மெக்ராத் பவுலிங்கில் சிக்ஸர் அடிக்க முடியாது. மண்டையில் தையல் வேண்டுமானால் அடிக்க வாய்ப்புள்ளது. அடுத்தவர் ஸ்டிராட்டஜியை அப்பட்டமாக காப்பி அடித்தால் ப்ளான் பி என்ன என்று தெரியாமல் சக்கர வியூகத்தில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். 

(தொடரும்)
Written by Shankar Ji – எழுதியவர்: ஷங்கர்ஜி