ஒரு ஆப்ஷன்ஸ் காண்டிராக்ட்டை வாங்குவதற்கு முன் கவனிக்கவேண்டியவை என்ன?
ஓரு பங்கில் முதலீடு செய்ய என்னவெல்லாம் கவனிக்கவேண்டுமோ அத்தனையும்தான்.
நேரடியாக கேஷ் மார்க்கெட்டில் ஒரு ஷேரினை வாங்கி அது விலை ஏறும் வரையில் காத்திருக்கவே இவ்வளவு மெனெக்கெடல் தேவை என்றால் ஒரு மாதத்தில் / வாரத்தில் முடியப்போகும் முதலீட்டிற்கு எவ்வளவு கவனம் தேவை?
முதலில் ஆப்ஷன் செயின்.
இப்பொழுது டிரேடிங்க் கேண்ட்டிலிலேயே ஆப்ஷன்ஸ் செயின் வந்துவிட்டது.
ஒவ்வொரு ஸ்டிரைக் ரேட்டிலும் எவ்வளவு வால்யூம் நடந்திருக்கிறது? எதில் மக்கள் அதிகம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியவரும்.
எப்பொழுதுமே முழுமையான எண்களில் உள்ள ஸ்டிரைக் ரேட்டினை வாங்குவது நல்லது. அதில்தான் பெரும்பாலும் கால் அல்லது புட் விற்பனை நடக்கும்.
ஆனால் கடகடவென்று ஏறிக்கொண்டிருக்கும் பங்குகளில் இந்த விதியை சற்று தளர்த்தலாம். உதாரணத்திற்கு நிப்டி 11150 துவங்கி 11300 செல்வதற்கு மேலும் கீழும் அலைகிறது என்றால் அன்றைக்கு 11000 காலை விட 11100 க்கு மதிப்பு அதிகம் இருக்கலாம்.
ஹீட் மேப் பார்த்து எந்த கால் அதிகம் டிரேட் ஆகிறது என்றும் பார்த்து அதையும் வாங்கலாம்.
அதென்ன சார் ஹீட் மேப்? என்று கேட்பவர்கள் உங்கள் ப்ரோக்கர் சாப்ட்வேரை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று அர்த்தம்.

இப்பொழுது அதுவும் ட்ரேடிங் கேண்டிலில் வந்துவிட்டது.
இதை வைத்து எந்த பங்கு, ஆப்ஷன் கால் அல்லது புட், எந்த ப்யூச்சர் இன்றைக்குப் பறக்கிறது என்று பார்த்து அதில் குறுகிய டைம் லைனில் டார்கெட் பார்த்து, ட்ரெண்ட் லைன் பார்த்து விஷூவல் ட்ரேடிங் முறைப்படி முடிவெடுக்கலாம்.

வெள்ளிக்கிழமை உங்களுக்கு மேலே உள்ளது போன்ற செய்தி வந்திருக்கலாம். இது சொல்வது என்ன?
ஹெச் டி எப் சி வங்கி நன்றாக விலை ஏறும் என்று கணித்து சென்ற வாரம் இன் தி மணி ஜூலை மாத கால் 1100 ஸ்ட்ரைக் ரேட்டில் வாங்குகிறீர்கள். உதாரணத்திற்கு லாட் ஒன்றிற்கு 25000 என்று வைத்துக்கொள்வோம்.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அது விலை ஏறவில்லை.
அதனால் என்ன? சப்ஜெக்ட்டிற்கு வெள்ளி அன்று அசைவு வந்திருக்கிறது. ஜூலை மாத காண்டிராக்ட் முடிய இன்னும் 4 நாட்கள் இருக்கிறது. நிச்சயம் திங்கள் அல்லது செவ்வாய், அட புதனுக்குள்ளாக 1150 போகாதா என்ன? லாபம் பார்த்து வெளியே வந்துவிடலாம் என்று காத்திருப்பீர்கள்.
என்ன நடக்கும்?
மேலே உள்ள செய்திப்படி,
மாத காண்டிராக்ட்கள் முடியும் வாரத்தில் அதன் இன் தி மணி கால் உங்களிடம் இருந்தால் கடைசி வாரத்தின் ஒவ்வொரு நாளும் பிரீமியத்தினை ஏற்றுவார்கள்.
வெள்ளி 10% துவங்கி 50% என்று ஏறிக்கொண்டே செல்லும். அந்த செய்திதான் மேலே இருப்பது.
25000 க்கு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் காலுக்கு 50% 12500 கூடுதல் செலுத்தவேண்டி வரலாம். கடைசி நாளில் டெலிவரி எடுத்துக்கொள்ளத்தயாரா? என்று கேட்பார்கள்.
01. சொற்பத் தொகை இருப்பதால்தான் ஆப்ஷனுக்கு வருகிறோம். அதிலும் வாங்கிய காலுக்கு இன்னும் லாபமே வரவில்லை.
02. மாதமோ முடியப்போகிறது. அடுத்த மாத காண்டிராக்ட்கள் வாங்கினால்தான் லாபம் பார்க்க முடியும்.
03. இந்த மாத இன் தி மணி காண்டிராக்ட்கள் எல்லாமே பிரிமியம் + மார்ஜின் என்று அதிக விலையில் இருக்கிறது. வாங்கினாலும், விலை ஏறாவிட்டால் நட்டம் வரும். டென்ஷன்.
04. கையிலிருக்கும் காண்டிராக்டிற்கு இப்பொழுது அதிக மார்ஜின் கேட்கிறார்கள்.
05. இப்பொழுது நீங்கள் 50% மார்ஜின் கூட கட்டத் தயாராக இருக்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். உங்கள் ஸ்ட்ரைக் ப்ரைஸ் கால் மேலே ஏற அதில் மக்கள் அதிகம் வாங்கி விற்கவேண்டும்.
06. எக்ஸ்பைரிக்கு 4 நாட்கள், அதிக ப்ரீமியம் இருக்கும் நிலையில் மக்கள் அடுத்த மாதக் காண்டிராக்டினை நோக்கிச் சென்றுவிடுவார்கள்.
07. அதிக முதலீடு, லாபம் குறைவு, தினம் ஏறும் ப்ரீமியம், ஆட்டோ ஸ்கொயர் ஆஃப், கட்டாய டெலிவரி, அடுத்த மாத நல்ல பொசிஷன்கள் எடுக்க முடியாதது என்று ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்வோம்.
15 தேதிக்குப் பிறகு ஆப்ஷன் வாங்குவதில் கவனம் தேவை என்று முந்தைய பாகத்தில் சொன்னது ஏன் என்று புரிகிறதா?
வரும் வாரத்தில் அடுத்த மாதக் கால்களில் கவனம் வைக்கலாம். திங்கள் முதல் வியாழன் வரை வீக்லி, மந்த்லி எக்ஸ்பைரி ஆட்டங்கள் களை கட்டும். விஷயம் தெரியாமல் அதில் சென்று மாட்டிக்கொள்ளக் கூடாது.
கால்குலேட்டெட் ரிஸ்க்கில் குறைவான லாபம் இருந்தாலும் நட்டம் இருக்காது.
(தொடரும்)
Written by Shankar Ji – எழுதியவர்: ஷங்கர்ஜி