Learn options in tamil – part 4: ஆப்ஷன்ஸ் அறிவோம் – 4

ஸ்ட்ரைக் ப்ரைஸ் என்றால் என்ன என்று எளிமையாக அறிந்துகொண்டோம்.

இப்பொழுது அதில் எதைத் தேர்ந்தெடுப்பது?

மீண்டும் நிப்டியையே எடுத்துக்கொள்வோம்.

2021 மார்ச் மாதம் வரையில் கூட நிப்டியில் ஒரு கால் அல்லது புட்டை நீங்கள் வாங்கமுடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அமெரிக்காவில் ஆப்ஷன் காண்டிராக்ட்களை வருடக் கணக்கில் வாங்கி வைத்துக்கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு ஆப்பிள் அல்லது பேஸ்புக் நல்ல கம்பெனி நாளைக்கே இழுத்து மூடமாட்டார்கள் என்று ஒரு அமெரிக்கர் நம்பினால், ஒரு லாட் இன் தி மணி கால் ஆப்ஷனை 2025 டிசம்பர் காண்டிராக்டில் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பங்கு 200% 2025 டிசம்பரில் விலை ஏறினால் எவ்வளவு லாபம் என்று பாருங்கள். இறங்கினால் நட்டம் என்பதையும் அறிக.

ஆனால் நீண்டகால முதலீடு செய்யும்போது ஒரு கம்பெனியின் தன்மை பார்த்து வாங்கும்போது லாபத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்தானே?

பொதுவாக ஆப்ஷன்கள் நீண்டகால கேஷ் முதலீடு செய்பவர்களுக்கான இன்சூரன்ஸ் மாதிரித்தான். ஹெட்ஜிங். உங்களிடம் காசு இருக்கிறது. 1010 ரிலையன்ஸ் ஷேரை மொத்தமாக காசு கொடுத்து கேஷ் மார்கெட்டில் வாங்கி இருக்கிறீர்கள். அதன் விலை ஏறலாம், இறங்கலாம். அப்படி ஏறி இறங்கும் ஒவ்வொருமுறையும் அதை விற்று வாங்காமல், கால் அல்லது புட் ஆப்ஷனை இரண்டு லாட் வாங்கி லாபம் பார்க்கலாம்.

இந்தக் களத்தில்தான் கையில் எந்தப் பங்கும் இல்லாமல் வெறுங்கையால் நாம் ஆப்ஷன் கால் அல்லது புட் வாங்கி முழம் போட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்குத்தான் நேக்கட் கால் என்று பெயர்.

சரி, மீண்டும் ஸ்ட்ரைக் ப்ரைஸ்..

நிப்டி தினம் ஏறி இறங்கும் ஒன்று. ஒவ்வொரு வாரமும் எக்ஸ்பைரி உண்டு. உடனடி முடிவெல்லாம் எடுக்கத்தெரியாதவர்கள், நிப்டி கண்டிப்பாக ஏறும் என்று நினைப்பவர்கள், மாதக் காண்டிராக்ட்கள் அதுவும் ஓரிரு மாதங்கள் தள்ளிக் கூட வாங்கலாம். நடுவில் நடக்கும் எக்ஸ்பைரி விளையாட்டுக்கள் உங்கள் வயிற்றில் புளியைக் கரைக்காது.

என்ன சார், 0.60 பைசாவுக்கு டீப் ஓ டி எம் கால் வாங்காதீர்கள், அது சுரண்டல் லாட்டரி என்று சொல்லிவிட்டு இப்பொழுது அமெரிக்காவில் 5 வருஷ காண்டிராக்ட்டும், இந்தியாவில் சில மாதங்கள் தள்ளியும் வாங்கச் சொல்கிறீர்கள்? இதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது?

பங்குச் சந்தையின் நுணுக்கங்கள், அடிப்படைகள் படிக்கும்போது நிதானமான மனநிலை தேவை. ஜாக்பாட் அடிக்க, ஒரே நாளில் ஓவியா ஆவது எப்படி என்ற மனநிலையில் மட்டுமே படித்தால் பல அடிப்படைகள் கோட்டை விடுவீர்கள், பணம் காணாமல் போகும். சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது கவனம் பாடத்தில்தான் இருக்கவேண்டும். கையை விட்டு ஓட்டவோ, ரேஸில் ஓட்டவோ நினைத்துக்கொண்டிருந்தால் முட்டி பெயர்ந்து ரத்தம் வருவதைத் தவிர்க்க இயலாது.

மேலே சொன்ன இரண்டு உதாரணங்களுமே இன் தி மணியை அடிப்படையாகக் கொண்டவை. அதிக நாட்கள் உடைய காண்டிராக்ட்கள். கிட்டத்தட்ட பேங்க் பிக்ஸட் டெபாசிட் போல. 0.60 பைசா சுரண்டல் லாட்டரி அந்த மாதத்திற்கோ, அந்த வாரத்திற்கோ எடுக்கப்படும் அமைதிப்படை அமாவாசை முடிவு. வெகு சிலரால் அரண்மனைக்கு ஓனராக முடியும். பெரும்பாலும் தேங்காய் மூடி கூட மிஞ்சாது.

சத்தியமா புரியல சார்.

ஓக்கே.

இன்றைக்கு 23 ஜூலை. நிப்டிக்கு வீக்லி எக்ஸ்பைரி.

நிப்டி 11132 ல் இருக்கிறது.

ஆப்ஷன் செயின் சென்று பார்க்கிறீர்கள். போன பாகத்தில் சொன்னது போல பல ஸ்ட்ரைக் ரேட்கள்.

இன்றைக்கு நிப்டி 11250 க்கும் செல்லலாம். 10900 க்கும் செல்லலாம். அதை சரியாகக் கணித்து கால் அல்லது புட் வாங்கும் மக்களுக்கு இன்றைக்கு லாபம் கிடைக்கும்.

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது. நிப்டியின் இன்றைய அதிகபட்ச மேலே கீழே ரேஞ்ச் என்பது அதிகபட்சம் 300 பாயிண்ட்கள்.

இன்றைய எக்ஸ்பைரியில் நீங்கள் வாங்கும் காண்டிராக்ட்கள் இன்று மாலையோடு முடிந்துவிடும்.

உதாரணத்திற்கு. இன்றைய எக்ஸ்பைரியில் 11250 கால் ஒரு லாட் வாங்குகிறீர்கள். ஒரு லாட் விலை 7000 என்று வைத்துக்கொள்ளுங்கள். நிப்டி 11400 செல்கிறது. இன்று மாலை உங்களுக்கு குறைந்தது 1000 ரூபாயாவது லாபம் கிடைக்கும். ஆகமொத்தம் 7000 முதலீட்டுக்கு 1000 ரூபாய் லாபம். ஒருவேளை நிப்டி 10900 சென்றுவிடுகிறது. என்ன ஆகும்? முதலீடு கடலில் கரைத்த பெருங்காயம்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

இப்படி 300 பாயிண்ட் ரேஞ்சிற்கே இந்த நிலை என்றால். இன்றைக்கு வாங்க சார் நிப்டி 14000 போகும் நம்ம கடைல விலை 0.60 பைசாதான் என்று அழைப்பவர்கள் ஏன் அழைக்கிறார்கள் என்று புரிகிறதா? இதுதான் சுரண்டல் லாட்டரி. குதிரையின் காதைப் பார்த்து பெட் கட்டும் குதிரை ரேஸ்.

இப்பொழுது கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்.

நிப்டி இன்றைக்கு 11250 நிச்சயம் 12000 செல்லும். குறைந்தது 3 மாதமாகலாம். என்று ஒரு கணக்கை நீங்கள் போடுகிறீர்கள். இது ஜூலை. அக்டோபரில் 12000 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு ஆப்ஷன் கால் வாங்குகிறீர்கள். நடப்பு காண்டிராக்ட்களை விட விலை அதிகம்தான்.

ஆக்ஸ்ட்டிலேயே நிப்டி 12000 தாண்டுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நிச்சய லாபம் என்பது கணிசமாக இருக்கும். 12000 கால் இன்றைய எக்ஸ்பைரிக்கு வாங்குவதற்கும், ஓரிரு மாதங்கள் தள்ளி வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா?

ஒருவேளை நிப்டி கீழே இறங்கினால்? நட்டம்தான். ஆனால் சூடு வைத்த ஆட்டோ மீட்டர் போல இல்லாமல் பெருங்காய டப்பாவையாவது காப்பாற்ற கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்.

எச்சரிக்கை:

ஏறுமா? இறங்குமா? என்று கணிக்கத் தெரியாதவர்களுக்கு மேலே சொன்ன அனைத்துமே சுரண்டல் லாட்டரிதான். நீங்கள் இந்த விளையாட்டில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

இந்தக் கட்டுரையின் நோக்கம், சரியான ஸ்ரைக் ப்ரைஸ் அது எப்படி வேலை செய்கிறது? எதைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்புபவர்களுக்கான சிறிய விளக்க உரை அவ்வளவுதான். இப்படி வாங்குங்கள் லாபம் நிச்சயம் என்பதற்கான பரிந்துரை அல்ல. தெளிவாகப் புரிய ஸ்ட்ராட்டஜி மற்றும் சைக்காலஜி கட்டுரைகளை மீண்டும் படியுங்கள்.

(தொடரும்)
Written by Shankar Ji – எழுதியவர்: ஷங்கர்ஜி